மாறாத தாயுள்ளம்
மறவாது என்நெஞ்சம்!
நீ பிறிந்தா யென்றறிந்த
கணமதிலே என்னுளமும்
எனைவிட்டுப் பிறிந்துந்தன்
அருகடைந்து நின்றதுவே!
உளமாரத் தாயாக
நீயெனக்குச் செய்ததெலாம்
உளமார நானென்றும்
நினைக்கின்றேன் நீயறிவாய்!
பிள்ளைப் பிராயத்தில்
என்றில்லை இறுதிவரை
தான்பெற்ற மகவாகத்
தானென்னை நீநினைத்தாய்!
வளர்ந்தபின் உன்னுடனே
நானிருந்த காலங்கள்
கணக்கினிலே தான் குறைவு,
மனத்தினி லேயல்ல!
இசைதன்னை யேயெனக்கு
உணவாகப் புகட்டிவிட்டாய்!
வசையென்றும் உன்வா
யிருந்துவந்து கேட்டதில்லை!
வாசலிலே நீவரைந்த
கோலங்கள் என்றென்றும்
வரிசை கலையாத
புள்ளிகளா யென்னுளத்தில்
இன்றும் நிலைத்திருந்து
இனிமை பரப்பிடுதே
இன்னிசைகள் பாடிடுதே!
'கருணாலயநிதி'யாய்
நீயிசைத்த கானங்கள்
கனிவாய் இன்றுவரை
இதயத்தில் இசைக்கோலம்!
தாய்ப்பசுவைத் தொடர்கின்ற
கன்றெனவே நானுன்னை
என்றும் தொடர்ந்திருந்தேன்
ஏழாம் பிராயம்வரை!
வளர்ந்து கல்லூரிப்
பருவமதில் வந்தடைந்தேன்
பின்னும்நின் வாசலையே
பெருமையுடன் நின்மகவாய் !
சோறும் மோரும்நீ
தந்ததென்றும் உச்சியிலே
சுகமாக மனம்குளிர
வைத்ததுண்டு உண்மையிலே!
பலநாட்கள் நள்ளிரவில்
வீடுவந்து சேரும்வரை
விழிசோரா திருந்தெனக்கு
இன்னமுதம் ஈந்ததுண்டு!
என்றென்றும் அந்நினைவு
எனைவிட்டு அகலாது!
பண்டிகைகள் பூசனைகள்
ஆகும்நன் னாட்களெலாம்
இன்றும் உனதன்புக்
குரலதனைக் கேட்கின்றேன்!
நானேமறந்திடும் என்
நட்சத்திரத் திருநாளை
நினைவாக முடிந்துவைத்து
நீயென்னை வாழ்த்திடுவாய்!
இறுதிவரை இந்நிகழ்ச்சி
இடறிச் சென்றதில்லை!
இன்றைக்கும் என்றைக்கும்
என்தாயாய் எனில்நிறைந்து
நிற்கின்றா யென்பதனை
நான்மட்டும் தானறிவேன்!
நலம்புரிந்தே யுன்மக்கள்
வளர்ந்து பெருகிடவே
வானுலகி லேயிருந்து
வாழ்த்தி யருள்புரிவாய்!
நினைந்து நலம்பெறுவோம்!
--K.Balaji
Aug 02 2017