Face Book Like Button

My Great Web page

Friday, December 7, 2018

சிரிப்பால் சிறந்தவர்கள் ! சிந்திக்க வைத்தவர்கள் - டி.எஸ். பாலையா


சிரிப்பால் சிறந்தவர்கள் ! சிந்திக்க வைத்தவர்கள் !
தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத்திலிருந்தே, நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஒரு தனியிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது. சிரிப்பில்லையேல் சிந்தனையில்லை; சிந்தனையில்லையேல் சிறப்படைய வழியில்லை! இக்கருத்தை மனதில் கொண்டுதான் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை, திரைக்கதையில் நகைச்சுவைக்கும் தனியிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள் ! அப்படி நம்மைச் சிரிக்க வைத்தவர்களை, நம் சிந்தையில் இருத்திச் சிறக்கவைக்க வேண்டும் என்பதே இந்தக் குறிப்பின் நோக்கம்.
1936 முதல் இன்று வரை நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் பட்டியல் இதோ ! டி.எஸ். பாலையா , என்.எஸ்.கிருஷ்ணன், டி மதுரம், டி ஆர் ராமச்சந்திரன் , டி.எஸ்.துரைராஜ், ஜே பி சந்திரபாபு, காளி என் ரத்தினம், ப்ரண்ட் ராமசாமி, எம்.சரோஜா, காகா ராதாகிருஷ்ணன் , கே..தங்கவேலு, சச்சு , சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, சோ ராமஸ்வாமி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன், வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி , வெண்ணிற ஆடை மூர்த்தி ,ஜனகராஜ், குமரிமுத்து, செந்தில், கோவை சரளா, சின்னி ஜெயந்த் , விவேக், எஸ்.எஸ்.சந்திரன், சார்லி, வடிவேலு, வையாபுரி, சந்தானம் ஆகியோர் . ஒவ்வொரு வாரமும் ஒருவரைக் குறித்து இத்தொடரில் நாம் அறிந்ததை வெளியிட உத்தேசித்திருக்கிறோம்.
நினைவுகளை எட்டும் வரை இழுத்துச் சென்று, இணையத்தில் இணைந்திருக்கும் எழுத்துக் கருவூலங்களின் எல்லையற்ற துணையையும் கைக்கொண்டு, முடிந்தவரை அனைத்து நகைச்சுவை நடிகர்களையும் இங்கே நினைவுகோர முயற்சித்திருக்கிறோம் !. இதோ தொடருகிறது , சிரிப்புச் சிகரங்களைக் குறித்த ஒரு சிறப்புப் பார்வை !
----Rajesh Venkatasubramanian, Krishnamurthi Balaji

சிரிப்பால் சிறந்தவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் - 1

டி.எஸ். பாலையா: 1914இல் பிறந்த இவர், திரையுலகில் வாழ்ந்த காலம் 1936 முதல் 1972 வரை ஆகும். ‘யதார்த்தம் பொன்னுசமி பிள்ளை அவர்களின் மதுரை பாலகானம் டிராமா கம்பெனியில் தனது கலைவாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1946 இல் சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். பி.யு.சின்னப்பா அவர்கள் நடித்த பெருவாரியான படங்களில் இவருக்கு வில்லன் வேடமே கிடைத்து வந்தது.
இடையில் சில காலங்கள் இருண்ட காலமாக இருந்த போதிலும் , சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகி தாம் தயாரித்த 'சித்ரா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவைத்து அவரது வாழ்வை ஒளிமயமாக்கினார் என்பது அறிவு. தொடர்ந்து 1956 இல் 'வெறும் பேச்சல்ல' என்ற படத்தில் கதாநாயகி பத்மினிக்கு ஜோடியாக, கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது . வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்ற எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவர். வில்லன் பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க படங்கள் அம்பிகாபதி (1947), மதுரை வீரன், பார்த்திபன் கனவு போன்றவை. எண்ணற்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்று, ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர் இவர். அண்மைக்காலத்திலிருந்து நோக்கினோமெனில், மறக்க முடியாத இவரது படங்கள் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, மணமகள், ஓர் இரவு, வேலைக்காரி போன்றவையாகும். இரு சகோதரர்கள், வாழ்க்கைப் படகு, பாக்தாத் திருடன், காத்தவராயன், காலம் மாறிப்போச்சு , ஏழை படும் பாடு, மகனே நீ வாழ்க போன்றவை இன்னும் சில குறிப்பிடத்தக்க படங்கள். .
இவர் போடாத வேஷங்களில்லை; நடிக்காத கதாபாத்திரங்களில்லை. 'பாமா விஜயம்' படத்தில், சிரிப்பினூடே சிந்தனையைப் புகுத்தும் இவரது நடிப்பை யாராலும் மறக்க முடியாது. 'வரவு எட்டணா' பாட்டு ஒன்று போதும்! காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, போன்ற படங்களில் அவரது நகைச்சுவை காலத்தால் அழியாத காவியம் என்றே கூறலாம் ! நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பது பெரிதல்ல. வசனங்களை 'டைமிங்' தவறாமல் சொல்லுவதுதான் பெரிது. பாலையா அவர்கள் அதை எத்தனை திறம்படச் செய்கிறார் என்பது அவரது படங்களைப் பார்த்தாலே புரியும் !
ஊட்டி வரை உறவு படத்தில் பாலையாவுடன் நாகேஷ் : டைமிங் வசனம்: "உள்ள எறங்கிப் பாரு தெரியும்!". முகபாவங்களும் வசன உச்சரிப்பும் அபாரம் !
இயல்பான நகைச்சுவை அவருக்குக் கை வந்த கலை ! 'காதலிக்க நேரமில்லை படத்தில், 'டே செல்லப்பா, எலும்புதான் இருக்கு' என நாகேஷை அவர் கடிந்து கொள்வது! அடுத்து ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனிடம் அவர் குழைவது! அத்தனை காட்சிகளும் அருமையிலும் அருமை ! ஒரே காட்சியில் முகபாவங்களை மாற்றி மாற்றிக் காட்ட அவரையன்றி ஒருவராலும் இயலாது .
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும்போது இவர் காட்டும் முகபாவங்கள் மறக்க முடியாத ஒன்று . அதைக் கீழே கொடுத்துள்ள காணொளியில் காணுங்கள் :

via ytCropper

திருவிளையாடல் படத்தில் வெளிநாட்டுப் பாடகர் பாத்திரத்தில் நடித்த பாலையா அவர்கள் பாண்டிய மன்னனுக்கு சவால் விடும் காட்சி மனதில் நிற்கும் ஒன்று . 'ஒரு நாள் போதுமா' என்று பாடுவதிலாகட்டும், பிறகு மன்னன் தரும் பரிசை மறுத்து, அகங்காரத்துடன் பாண்டிய நாட்டுப் பாடகர்களைப் போட்டிக்கு அழைக்கும் வேகத்திலாகட்டும், அவரது நடிப்பும் முகபாவங்களும் தனி முத்திரை பதித்தன! காட்சியைக் கீழே பாருங்கள் :
இப்படி அவரது திறமைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ! எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் வெகு சில நடிகர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் திரு.பாலையா அவர்கள் . அன்னாரைப்பற்றி ஒரு நான்கு வரிகள் எழுத இயன்றதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறோம் .
--K.Balaji