பிரிவின் சுமைகள் !
'கட்டிக் கொடுத்த சோறும்
சொல்லிக் கொடுத்த பாடமும்
எத்தனை நாளைக்குக் கூட வரும்
என்று சொல்வதுண்டு!
என்னைப் பொறுத்த வரையில்,
என்னை வளர்த்தெடுத்த தாய், நீ
கட்டிக் கொடுத்த சோறு
இன்னும் என்
கூட வந்து மணக்கிறது.
நீ சொல்லிக் கொடுத்த
ஒவ்வாரு சொல்லும்
இன்றுவரை
என் நினைவில்
துணைநின்று
வழி நடத்திச்
செல்கிறது!
இதுதான் உண்மை!
என்னைப் பெறவில்லை
என்றாலும்,
சுமந்தாய் நீ மனதில்!
என் காலில் விஷக்கல்
குத்திய கதைகள்
இன்னும் மனதில் ரணம்!
ஒவ்வாரு முறையும்
எனக்காக நீ நடந்த
நடைகள் எத்தனை எத்தனை !
'இன்னுயிரைத்
தன்னுயிர் போல் மதித்தல்'
என்பதை
உன்வரையில் நீ
உண்மையாக்கிய கதைகள்
எத்தனை நான் கண்டு,
மனதில் கொண்டேன் !
வசைச்சொற்கள்
உன்வாயிருந்து
வந்தபோதும்
அதை நான்
இசையாகத்தான் கண்டேன்!
ஏனெனில்
நான் அறிவேன்,
அடுத்த கணமே
அவை உன்
மனம்விட்டு அகலும்
என்பதை !
அவை என்னைப்
புடம் போட்ட பொன்னாக
மாற்றும் என்பதை!
பிரிவின் சுமைகள்
கனக்கின்றன!
காலம் அதனை
எளிதாக்கும்!
நினைவை இசையாக்கும்
குயிலாய் என்றும்
மனதில் நிறைகின்றாய்
நீ என் தாய் !
நீ என் தாய் !
--பாலாஜி
04.05.16