வித்தியாசமில்லா வழிபாடு
விஷ்ணுவின் திவ்யரூபத்திலிருந்து வைத்தகண்ணை வாங்கமுடியாமல் எவரும் சொக்கிக்கிடக்க வேண்டியதாயிருக்கிறது. ஸ்ரீ ராமனாகவும் கிருஷ்ண பரமாத்மாவாகவும் அவதரித்தபோதும் இந்த ஜகன்மோகன சௌந்தர்யம் அவரைவிட்டு நீங்காமலே இருந்திருக்கிறது..,..மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும், பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒ ன்று சேர்ந்தவுடன் ஒரு மஹாதேஜஸ், ஒரு பெரும் ஜோதி பிறந்தது. இந்த தேஜஸ்ஸே ஐயப்பனாக உருக்கொண்டது.
ஐயன் என்பது 'ஆர்ய' என்பதன் திரிபு. 'ஆர்ய' என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.
ஹரிஹரபுத்ரானாகிய சாஸ்தாவை மதிப்புக்குரியவராக - ஆர்யனாகக் குறிப்பிடுகிறோம். இதிலே வேடிக்கை, பொதுவாகத் தமிழ் நாட்டில் அய்யர்(குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோயில்களில் உள்ள ஸ்வாமிதான் அய்யராக-அய்யனாராக இருக்கிறார். கொஞ்சங்கூட இப்போது பேசப்படுகின்ற இனவித்தியாசங்கள் முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.
பரமாசார்யாள் திருமொழி - 1
'காட்டிக் கொடுக்கும் காலடி'
ஸ்ருஷ்டிகர்த்தனாக ஒரு சுவாமி இருப்பதற்கு நாமே அடையாளம் .நம் ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் அவன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போட முடியுமா? மனிதன், தன் கெட்டிக்காரத்தனத்தால் செய்துள்ள காரியங்களைவிட அதிகமாக ஒரு சிறு இலையில் ரேகை போட்டு விசித்திரம் செய்திருக்கிறான் அவன். இதெல்லாம் அந்த மகாதிருடனின் ரேகை அடையாளம். திருடன் பதுங்கியிருப்பது போல் இவனும் பதுங்கியிருப்பவன் தான் ! அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பத் திரும்பச் சொல்லும்!
நம் இதயம்தான் அந்தக் குகை ! நமக்குள்ளேயே ஒளிந்துகொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து நம்மை ஆச்சர்யப்படுத்தி தன்னைத் தேடவைக்கிறான் ஸ்வாமி !
--------------------------
பரமாச்சார்யாள் திருமொழி - 2
கண்ணன் பிறந்த தினம்
ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் "உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக்கொண்டிருக்கிறான்" என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலாத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நிழலும் நீரும் தென்பட்டால் அளவில ஆனந்தத்தைத் தருகிறது.. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது .
ஸ்ரீ கிருஷ்ணன் தட்சிணாயனத்தில் ஆவணி மாதத்தில்ஸ்ரீ கிருஷ்ணா பட்ச அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம், தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் அவர்களுக்குப் பகல், கிருஷ்ணா பட்சம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ணபட்சம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி, பக்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடு நிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி.இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை !
அவனுடைய பெயரும் கிருஷ்ணன்.'கிருஷ்ணன்' என்றால் 'கருப்பு' என்று பொருள். அவனது மேனியும் கருப்பு. ஒரே கருப்பான சமயத்தில் ஆவிர்ப்பவித்த ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது.அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை விளங்கும்..அவனுடைய கீதை உலகெங்கும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் நிறைந்திருக்கும் ஸ்ரீ பாகவதம், புராணச்ரேஷ்டமாக விளங்குகிறது . உடல் இருக்கும் உயிருக்கு ஒளியாயிருப்பது கண். உலகத்துக்கே ஒளியாயிருப்பவன் கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்ல; கண்ணனும் கூட.
உள்ளக் கண்ணையும் வெளிக் கண்ணையும் அம்ருததில் மூழ்கடிக்கக் கூடிய வடிவம் அவனுடையது. காதின் வழியாகவும் வேணுவின் சங்கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருததையும், உட்செலுத்திக் குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நமது உலகுக்குக் கண். கறுப்பினிடையே விளங்கும் ஒளி.
ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அனேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதும் ரசிகன், மல்யுத்தத்தில் தேர்ந்தவன், காளை மாடுகளை அடக்கிக் கட்டுபவன், ராஜ தந்திர நிபுணன், தூது செல்பவன்,சாரதி, துரோபதை குசேலர் போன்ற அனாதர்களை ரக்ஷிப்பவன்,பீஷ்மருக்கு முக்தி அளித்தவன், பீஷ்மருக்கு மாத்திரமல்ல - தன்னைக் கொள்ளும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுத்தவன் - இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான். உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக, அநேகவிதமான மனப் போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும், சூரனும், திருடனும், ஸ்திரீ லோலனும், பேதையும், உழைப்பாளியும், கிழவனும், குழந்தையும், இறுமாப்புடையவனும், பரோபகாரியும், மனமுருகியவனும், கல்நெஞ்சனும் ஊதாரியும், மூடனும், கல்விமானும், யோகியும், ஞானியுமாகப் பல விதமான மனநிலையை உடையவர்கள் உலகத்தில் அமைந்திருக்கிறார்கள்.
இவர்களில் தீய அம்சமுள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட மகாத்மாவால் ஆகர்ஷிக்க முடியாமலும் போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரசமாயிருக்கும். ஓர் உல்லாச புருஷனுக்கு இன்னொரு உல்லாச புருஷனின் கேளிக்கைகளே சுவாரசியமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவர வேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக வேஷம் போட்டான். பற்பல போக்குக் கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக்
கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணாவதாரம் !
**************