இதயப் பேழைக்குள் இட்டு வைத்திருந்த இசைப் பொக்கிஷம் ஒன்று , இன்று உயிர் பெற்று இன்னிசை பொழியத் தொடங்கியது! கடந்த 45 ஆண்டு காலமாக அந்த இரண்டு காகிதங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன் நான் !
‘அந்த இரண்டு துண்டுக் காகிதங்களுக்கா இத்தனை மதிப்பும் மரியாதையும் உங்கள் மனதில்' என்று நீங்கள் கேட்கலாம்! ஆம் ! அவை வெற்றுக் காகிதங்களல்ல! அவற்றுக்கு உயிர் உண்டு !
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு , எனது அருமை சித்தப்பா நடராஜன் அவர்களால் எழுதி வைக்கப்பட்ட 'தரங்கம்பாடி பஞ்சநத அய்யர்' அவர்களால் இயற்றப்பட்ட ஒரு அருமையான பாடல் அது. 'ஆரபிமானம் வைத்தாதரிப்பார் என்னை' என்று தொடங்கும் ஒரு ராக மாலிகை! இந்தப் பாடலை சித்தப்பா பாடி ஒரு முறை கேட்டது இன்னும் நினைவிருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் ஒரு ராகம் மிளிரும் அருமையான பாடல். இப்போது இதை எழுதும்போதும் கூட என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பாடல் !
ஒரு இசைக் கட்டுரைக்காக ,'ஆரபி' ராகத்தில் அமைந்த பாடல்களைக் கணினியில் தேடிக் கொண்டிருந்தேன் ! அப்போதுதான் அல்வாத் துண்டு போல் என் கையில் விழுந்தது 'ஆரபிமானம்' பாடல் ! எத்தனையோ காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் நான் ! மிகவும் அபூர்வமான இந்தப் பாடலை வெகு சில பாடகர்களே பாடியுள்ளார்கள் . அதில் ஒன்றுதான் எனக்கு இப்போது கிடைத்தது.
கையெழுத்துப் பிரதிகளைப் புகைப் படம் எடுத்துக் கணினியில் இட்டு வைத்தேன். அதை அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டே பாடலில் லயித்தேன் நான் ! நெய்யாற்றின்கரை வாஸுதேவன் அவர்கள் பாடியுள்ளார் இந்தப் பாடலை ! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது ! இந்தப் பாடலில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் இனிமையான ராகங்கள்:
ஆரபி, ஆனந்தபைரவி, கல்யாணி, ஹம்ஸத்வனி, சாரங்கா, சாமா, மோஹனம், லலிதா, தர்பார், பைரவி, பூர்விகல்யாணி, கமலாமனோஹரி.
இதே பாடலைப் பாடியுள்ள இன்னொரு பாடகி , விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திருமதி. பந்துல ரமா அவர்கள் !
கேட்டுக்கொண்டிருக்கும் பாடலையும் , எழுத்துப் பிரதியையும் பார்க்கும்போது, சித்தப்பாவின் ஸங்கீத ஞானத்தினைப் பற்றியும், அவருக்கு அதில் இருந்த ஈடுபாட்டினையும் குறித்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனேன் நான் ! எந்த இடத்தில் எந்த வரிகளை இரண்டு முறை பாட வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பு; லலிதா ராகம் 'வஸந்தா' ராகத்தைப் போல் இருக்கும் என்று ஒரு குறிப்பு ! சிட்டஸ்வரங்கள் எங்கெங்கு வருகிறது என்பது பற்றியும், அவை எந்த வரிசையில் இருக்கின்றன என்பது பற்றியும் ஒரு குறிப்பு ! கேட்டுக்கொண்டிருக்கும் பாடலோடு ஒப்பிட்டுக் கொண்டே வந்த நான் அதிசயித்துத் தான் போனேன் !
இணைத்துள்ள, எழுத்துப் பிரதியின் புகைப் படங்களைப் பார்த்தால், மறைந்த என் சித்தப்பா அவர்களின் ஞானம் குறித்து நான் சொன்னது எவ்வளவு உண்மை என்று புலப்படும் ! சித்தப்பாவின் இசை ஞானத்தைக் குறித்து என் தந்தையார் சொல்வது என் நினைவுக்கு வருகிறது : "என் சகோதரி ராஜிக்குப் பாட்டு வாத்தியார் அப்போதுதான் சொல்லிக்கொடுத்து விட்டுப் போன பாடலை , அடுத்த நிமிடத்திலேயே ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டிவிடும் அளவுக்கு இருந்தது அவனது இசையார்வமும் ஞானமும்" என்பார். பல இசைக் கச்சேரிகளுக்கு என்னைக் கூட்டிச் செல்வார் அவர். அவரால்தான் எனது இசையார்வம் வளர்ந்தது ! இன்றுஎனக்கிருக்கும், அற்ப சொற்ப இசை ஞானமும் அன்னாரின் கொடைதான் ! என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் அவருக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.