Face Book Like Button

My Great Web page

Wednesday, September 15, 2021

Malayalam lesson 2

Malayalam Lesson 2 Words used in Conversation At first aadhyam Breakfast prabhaatha bhakshaNam clean vruTHi preparation orukkam aadhyam namukku kuLichu vruTHi aakaam. pinneyalle prabhatha bhakshaNaTHinulla orukkam ! feeling bad vishamam, mana prayasam, sankatam news sangathi, vishayam too much orupaadu sangathi arinjappOL manassile orupadu vishamam thOnni to bear sahikkuka unbearable sahikkaan vaiyyaTHa hue and cry oCHappaadu commotion/ disturbance bahaLam aduTHa veettile entho oCHappadum bahaLavum. sahikkan vaiyya quarrel vazhakku quarrelling vazhakku koottunnathu avaru randu perum thammil vazhakkuNdaayi . yet, still iniyum ayaaL iniyum vannilla pay bill billu adaykku did you pay the bill? nee billu adacho? Tomorrow naaLe Yesterday innale day after matte naaLu njan innale paranju naaLeyo matte naaLo tharam ennu anything vallathum to eat kazhikkan kazhikkan vallathum edukkatte? I got fed up enikku maduTHu Come Soon vegam varaNam before-hand nEraTHe njan nEraTHe paranjirunnu early nEraTHe ataL nEraTHe eNittu puraTHu vannu. NammaL raavile nEraTHe ezhunnelkkaNam. prepare oruNGuka nammaL nEraTHe oruNGENdathaayirunnu get in akaTHu kayaruka

Thursday, April 9, 2020

இந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?

இந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?



1943 அல்லது 1944இல் அன்றைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எங்கள் ஊர் ஆகிய திருச்சிராப்பள்ளிக்கு விஜயம் செய்திருந்தார் . அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்த சின்னக் கடைவீதிக்கு மிக அருகில் இரட்டைமால் தெருவில் தெருவையே வளைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். வாசலில் பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது . பந்தலுக்கு வெளியே யானை குதிரை ஒட்டகம் கட்டப்பட்டிருந்தன . அன்று பள்ளி விடுமுறை நாள் . இதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம் என்று நானும் சில பள்ளி நண்பர்களும் அங்கு போனோம்.  நாங்கள் போனபோது பூஜை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது . நானும் உள்ளே சென்று ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த எங்கள் குடும்ப நண்பர் என்னை சுவாமிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு "இவனுக்கு சமஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சி உண்டு. ஸ்லோகங்கள் கூட கவனம் செய்வான்" என்று சொல்லி வைத்தார்.

ஆச்சாரிய சுவாமிகள் என்னை கூர்ந்து கவனித்து விட்டு "எங்கே இப்போ ஒரு ஸ்லோகம் சொல்லு பார்க்கலாம்" என்றார். எனக்கு பயமாக இருந்தது. 'சொல்ல வரவில்லை' என்று கூறித் தப்பித்துக் கொண்டு இருக்கலாம் . ஆனால் அப்படி செய்திருந்தால் நான் இப்பொழுது கூறப்போகும் சுவையான சம்பவம் நிகழ்ந்திராதே!  ஒரு அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கணீரென்ற குரலில் பின்வரும் சுலோகத்தை செல்ல ஆரம்பித்தேன்.
"வந்தே (அ)ஹம் சங்கராச்சாரியார் அத்வைத மத ஸ்தாபகம்". ‌முதல் இரண்டு அடிகளை நான் சொன்ன உடனேயே சுவாமிகள் 'போதும்' என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு "நீ சொல்லுவதில் தப்பு இருக்கே" என்றார் !.. எனக்கு தூக்கி வாரிப்போட்டது!  பெரிய இடத்தில் இந்த மாதிரியான அதிகப்பிரசங்கித்தனம் செய்திருக்கக் கூடாது என்று தோன்றியது . கட்டியிருந்த கைகளை அவசரமாகப் பிரித்து முதுகுக்குப் பின்புறம் கொண்டுபோய் வைத்துக்கொண்டு நான் சொல்லிய ஸ்லோகத்தில் அட்சரங்கள் சரியாக உள்ளனவா என்று விரல்விட்டு எண்ணிப் பார்த்தேன்.  எழுத்துப் பிழை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.  நான் என்ன செய்கிறேன் என்பதை கவனித்து விட்ட சுவாமிகள் சிரித்துக்கொண்டே "நான் அட்சரங்களை பற்றிச் சொல்லலை. உன் சுலோகத்தில் உள்ள அர்த்தம் தப்பா இருக்கு" என்று மீண்டும் கூறினார். எனக்கு வெலவெலத்துப் போய் வியர்த்து விட்டது . ஏன் இந்த வம்பில் மாட்டிக் கொண்டோம் என்று தோன்றியது. என் திகைப்பைப் புரிந்து கொண்ட சாமிகள் புன்முறுவலுடன் கையை அசைத்து என்னை உட்காரச் சொன்னார் . நான் அமர்ந்தவுடன் என்னிடம் கேட்டார் "நீ கிறிஸ்துவப் பள்ளியில் தானே படிக்கிறாய்?" ஆமாம் என்ற குறிப்பில் பெருமாள் மாடு மாதிரி தலையை மட்டும் மேலும் கீழுமாக அசைத்தேன் . திடீரென்று ஸ்வாமிகள் ஏன் எதையோ கேட்கிறார் என்று எனக்கு புரியவில்லை . ஸ்வாமிகள் மேலும் தொடர்ந்தார். "கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் யார்?"

அந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரிந்ததால் சற்று தெம்பு பிறந்தது.

'ஏசுநாதர்' என்றேன். 
"ரொம்ப சரி , இஸ்லாம் மதத்தை ஸ்தாபித்தவர் யார்?" 
"நபிகள் நாயகம்"
 "அதுவும் சரி. இப்போ சொல்லு பார்க்கலாம் . நம்ம ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?"
சுவாமிகளுடைய இந்த கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை . தலையை மட்டும் 'தெரியாது'  என்ற குறிப்பில் பக்கவாட்டில் அசைத்தேன் . "நான் சொல்கிறேன் கேள்" என்று சுவாமிகள் தொடர்ந்தார் . அவர் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறார் என்பதை உணர்ந்து கலைந்து போய்க் கொண்டிருந்த பக்தகோடிகள் அவரவர் இடத்தில் மீண்டும் அமர்ந்துவிட்டனர்.  நிசப்தம் நிலவியது . ஸ்வாமிகள் அப்பொழுது நிகழ்த்திய உரையை எனக்கு நினைவில் உள்ளவரை இங்கு சுருங்கிக் கூறுகிறேன்.  "ராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களை பகவான் எடுத்தார் . ஆனால் இந்த அவதார புருஷர்கள் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்க வில்லை.  நம் தேசத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல ஆசாரியர்கள் தோன்றி தர்மத்தை வளர்த்தார்கள். ஆனால் அந்த ஆச்சாரியர்களும் இந்து மதத்தை ஸ்தாபிக்க வில்லை . நம் தமிழ்நாட்டில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றி பக்தி வெள்ளத்தைப் பரப்பினார்கள்.  ஆனால் இந்து சமயக் குரவர்களும் ஹிந்து மதத்தின் ஸ்தாபகர்கள் அல்லர்.  வாஸ்தவத்தில் நம் மதம் அனாதியானது. ஆகையால் தான் இதற்கு 'ஸனாதன தர்மம்' என்று பெயர். இந்து மதம் என்ற பெயர் பிற்காலத்தில் தான் ஏற்பட்டது . நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும் ஆச்சாரியர்களும் ஸனாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே எடுத்து போதித்தார்கள். ஆகையால்தான் 'மத ஸ்தாபகர்' என்று ஆதிசங்கரரைக் கூட, குறிப்பிடுவது சரியாகாது."

உரை முடிவுற்றது . அனைவரும் எழுந்து கலைந்து போகத் தொடங்கினார்கள்.  நானும் புறப்படத் தயாராக எழுந்து நின்றேன் . அப்பொழுது என்னை அருகில் வரும்படி ஆச்சாரிய சுவாமிகள் சமிக்ஞை செய்தார். அருகில் போய் நின்று கொண்டேன்.

"பரவாயில்லை. உன்னுடைய சுலோகத்தில் 'ஸ்தாபகம்' என்பதை எடுத்துவிட்டு 'போதகம்'  என்று போட்டுவிட்டால் அக்ஷரங்களும் சரியாகிவிடும் ; அர்த்தமும் சரியாக இருக்கும்" என்று புன்முறுவலுடன் கூறினார். என் மனக் குழப்பம் தீர்ந்து அமைதி அடைந்தேன்.
"வந்தே(அ)ஹம் சங்கராசார்யம்
அத்வைத மதபோதகம்" ....   என்ற அந்த இரண்டு அடிகள்  அரை நூற்றாண்டுக்குப் பிறகும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன .மேலும் இரண்டு அடிகளை இயற்றி அந்த ஸ்லோகத்தை பூர்த்தி செய்தேனா என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை; அது முக்கியமும் இல்லை.  விவரம் தெரியாத சிறுபிள்ளையாக இருந்த என்னை வியாஜ்ஜியமாக் கொண்டு மக்களுக்கு ஒரு பேருண்மையை அன்று ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உபதேசித்தருளியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் !

--- ஐராவதம் மஹாதேவன்

Friday, December 7, 2018

சிரிப்பால் சிறந்தவர்கள் ! சிந்திக்க வைத்தவர்கள் - டி.எஸ். பாலையா


சிரிப்பால் சிறந்தவர்கள் ! சிந்திக்க வைத்தவர்கள் !
தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத்திலிருந்தே, நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஒரு தனியிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது. சிரிப்பில்லையேல் சிந்தனையில்லை; சிந்தனையில்லையேல் சிறப்படைய வழியில்லை! இக்கருத்தை மனதில் கொண்டுதான் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை, திரைக்கதையில் நகைச்சுவைக்கும் தனியிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள் ! அப்படி நம்மைச் சிரிக்க வைத்தவர்களை, நம் சிந்தையில் இருத்திச் சிறக்கவைக்க வேண்டும் என்பதே இந்தக் குறிப்பின் நோக்கம்.
1936 முதல் இன்று வரை நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் பட்டியல் இதோ ! டி.எஸ். பாலையா , என்.எஸ்.கிருஷ்ணன், டி மதுரம், டி ஆர் ராமச்சந்திரன் , டி.எஸ்.துரைராஜ், ஜே பி சந்திரபாபு, காளி என் ரத்தினம், ப்ரண்ட் ராமசாமி, எம்.சரோஜா, காகா ராதாகிருஷ்ணன் , கே..தங்கவேலு, சச்சு , சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, சோ ராமஸ்வாமி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன், வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி , வெண்ணிற ஆடை மூர்த்தி ,ஜனகராஜ், குமரிமுத்து, செந்தில், கோவை சரளா, சின்னி ஜெயந்த் , விவேக், எஸ்.எஸ்.சந்திரன், சார்லி, வடிவேலு, வையாபுரி, சந்தானம் ஆகியோர் . ஒவ்வொரு வாரமும் ஒருவரைக் குறித்து இத்தொடரில் நாம் அறிந்ததை வெளியிட உத்தேசித்திருக்கிறோம்.
நினைவுகளை எட்டும் வரை இழுத்துச் சென்று, இணையத்தில் இணைந்திருக்கும் எழுத்துக் கருவூலங்களின் எல்லையற்ற துணையையும் கைக்கொண்டு, முடிந்தவரை அனைத்து நகைச்சுவை நடிகர்களையும் இங்கே நினைவுகோர முயற்சித்திருக்கிறோம் !. இதோ தொடருகிறது , சிரிப்புச் சிகரங்களைக் குறித்த ஒரு சிறப்புப் பார்வை !
----Rajesh Venkatasubramanian, Krishnamurthi Balaji

சிரிப்பால் சிறந்தவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் - 1

டி.எஸ். பாலையா: 1914இல் பிறந்த இவர், திரையுலகில் வாழ்ந்த காலம் 1936 முதல் 1972 வரை ஆகும். ‘யதார்த்தம் பொன்னுசமி பிள்ளை அவர்களின் மதுரை பாலகானம் டிராமா கம்பெனியில் தனது கலைவாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1946 இல் சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். பி.யு.சின்னப்பா அவர்கள் நடித்த பெருவாரியான படங்களில் இவருக்கு வில்லன் வேடமே கிடைத்து வந்தது.
இடையில் சில காலங்கள் இருண்ட காலமாக இருந்த போதிலும் , சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகி தாம் தயாரித்த 'சித்ரா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவைத்து அவரது வாழ்வை ஒளிமயமாக்கினார் என்பது அறிவு. தொடர்ந்து 1956 இல் 'வெறும் பேச்சல்ல' என்ற படத்தில் கதாநாயகி பத்மினிக்கு ஜோடியாக, கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது . வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்ற எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவர். வில்லன் பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க படங்கள் அம்பிகாபதி (1947), மதுரை வீரன், பார்த்திபன் கனவு போன்றவை. எண்ணற்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்று, ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர் இவர். அண்மைக்காலத்திலிருந்து நோக்கினோமெனில், மறக்க முடியாத இவரது படங்கள் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, மணமகள், ஓர் இரவு, வேலைக்காரி போன்றவையாகும். இரு சகோதரர்கள், வாழ்க்கைப் படகு, பாக்தாத் திருடன், காத்தவராயன், காலம் மாறிப்போச்சு , ஏழை படும் பாடு, மகனே நீ வாழ்க போன்றவை இன்னும் சில குறிப்பிடத்தக்க படங்கள். .
இவர் போடாத வேஷங்களில்லை; நடிக்காத கதாபாத்திரங்களில்லை. 'பாமா விஜயம்' படத்தில், சிரிப்பினூடே சிந்தனையைப் புகுத்தும் இவரது நடிப்பை யாராலும் மறக்க முடியாது. 'வரவு எட்டணா' பாட்டு ஒன்று போதும்! காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, போன்ற படங்களில் அவரது நகைச்சுவை காலத்தால் அழியாத காவியம் என்றே கூறலாம் ! நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பது பெரிதல்ல. வசனங்களை 'டைமிங்' தவறாமல் சொல்லுவதுதான் பெரிது. பாலையா அவர்கள் அதை எத்தனை திறம்படச் செய்கிறார் என்பது அவரது படங்களைப் பார்த்தாலே புரியும் !
ஊட்டி வரை உறவு படத்தில் பாலையாவுடன் நாகேஷ் : டைமிங் வசனம்: "உள்ள எறங்கிப் பாரு தெரியும்!". முகபாவங்களும் வசன உச்சரிப்பும் அபாரம் !
இயல்பான நகைச்சுவை அவருக்குக் கை வந்த கலை ! 'காதலிக்க நேரமில்லை படத்தில், 'டே செல்லப்பா, எலும்புதான் இருக்கு' என நாகேஷை அவர் கடிந்து கொள்வது! அடுத்து ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனிடம் அவர் குழைவது! அத்தனை காட்சிகளும் அருமையிலும் அருமை ! ஒரே காட்சியில் முகபாவங்களை மாற்றி மாற்றிக் காட்ட அவரையன்றி ஒருவராலும் இயலாது .
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும்போது இவர் காட்டும் முகபாவங்கள் மறக்க முடியாத ஒன்று . அதைக் கீழே கொடுத்துள்ள காணொளியில் காணுங்கள் :

via ytCropper

திருவிளையாடல் படத்தில் வெளிநாட்டுப் பாடகர் பாத்திரத்தில் நடித்த பாலையா அவர்கள் பாண்டிய மன்னனுக்கு சவால் விடும் காட்சி மனதில் நிற்கும் ஒன்று . 'ஒரு நாள் போதுமா' என்று பாடுவதிலாகட்டும், பிறகு மன்னன் தரும் பரிசை மறுத்து, அகங்காரத்துடன் பாண்டிய நாட்டுப் பாடகர்களைப் போட்டிக்கு அழைக்கும் வேகத்திலாகட்டும், அவரது நடிப்பும் முகபாவங்களும் தனி முத்திரை பதித்தன! காட்சியைக் கீழே பாருங்கள் :
இப்படி அவரது திறமைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ! எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் வெகு சில நடிகர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் திரு.பாலையா அவர்கள் . அன்னாரைப்பற்றி ஒரு நான்கு வரிகள் எழுத இயன்றதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறோம் .
--K.Balaji